பிசியோதெரபி என்றால் என்ன?
பிசியோதெரபியைத் தமிழில் இயன்முறை மருத்துவம் என்றும் அழைப்பார்கள். இது, மக்களின் அசைவையும் உடல் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் ஒரு மருத்துவத் துறை.
கீழ் முதுகு வலி உட்படப் பல உடல் பிரச்சினைகளுக்கு, பிசியோதெரபிஸ்ட்கள் உடற்பயிற்சி, மசாஜ் (Massage), கைகளால் செய்யும் சிகிச்சை (Manual Therapy) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

கீழ் முதுகு வலிக்குப் பிசியோதெரபி எப்படிச் செயல்படுகிறது
உங்கள் அசைவு வரம்பு (Range of Motion), வலிமை, நெகிழ்வுத்தன்மை (Flexibility) ஆகியவற்றை மேம்படுத்த, உங்கள் பிசியோதெரபிஸ்ட் பல முறைகளைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்:
- உடற்பயிற்சி: உடலின் மையத் தசைகளை (Core Muscles) வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், உங்களுக்கென்றே அமைக்கப்பட்ட பயிற்சித் திட்டம்
- மசாஜ்: வலியையும் தசை இறுக்கத்தையும் தளர்த்த உதவக்கூடும்
- வெப்ப ஒத்தடம் (Heat) ஆலோசனை: இறுகிய தசைகளைத் தளர்த்த, வீட்டில் மிதமான சூடு ஒத்தடம் எப்போது உதவலாம் என்று ஆலோசனை
- குளிர் சிகிச்சை (Cold therapy): குறிப்பாக வலி திடீரென அதிகரித்த பிறகு, வலியைக் குறைக்க உதவக்கூடும்
- மின் தூண்டல் சிகிச்சை (Electrical stimulation): வலியைக் குறைக்கவும், தசைகள் நன்றாகச் செயல்படவும் உதவக்கூடும்
பிசியோதெரபியால் கிடைக்கக்கூடிய பயன்கள்
பலன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால், கீழ் முதுகு வலிக்கான பிசியோதெரபி இவற்றுக்கு உதவக்கூடும்:
- வலி குறைதல்
- அசைவு வரம்பு மேம்படுதல்
- வலிமை அதிகரித்தல்
- சமநிலை (Balance), ஒருங்கிணைந்த அசைவு (Coordination) மேம்படுதல்
- இறுக்கம் குறைதல்
- வாழ்க்கைத் தரம் மேம்படுதல்
கீழ் முதுகு வலிக்கு உதவக்கூடிய பயிற்சிகள்
இவை பொதுவாகச் செய்யப்படும் பயிற்சிகள். ஏதேனும் ஒரு அசைவில் வலி ஏற்பட்டால், நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு எது ஏற்றது என்று பார்க்க, ஒரு பிசியோதெரபிஸ்டிடம் கேளுங்கள்.
- முழங்கால்-மார்பு நீட்சி (Knee to chest stretch): முழங்கால்களை மடக்கி, மல்லாந்து படுங்கள். ஒரு முழங்காலை இரண்டு கைகளாலும் பிடித்து, மார்பை நோக்கிக் கொண்டு வாருங்கள். 30 வினாடிகள் அப்படியே இருங்கள்; பிறகு மறு பக்கம் செய்யுங்கள்.
- பூனை-பசு பயிற்சி (Cat-cow): முதுகை நேராக வைத்து, கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றுங்கள். மூச்சை உள்ளே இழுத்தபடி, முதுகைக் கீழ்நோக்கி வளைத்து, மேலே பாருங்கள். மூச்சை வெளியே விட்டபடி, முதுகை மேல்நோக்கி வளைத்து, தாடையை மார்பை நோக்கிக் கொண்டு வாருங்கள். இதை 10 முறை செய்யுங்கள்.
- பறவை-நாய் பயிற்சி (Bird dog): கைகள் தோள்களுக்கு நேர் கீழும், முழங்கால்கள் இடுப்புக்கு (Hips) நேர் கீழும் இருக்கும்படி, கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றுங்கள். வலது கையையும் இடது காலையும் நேராக நீட்டுங்கள். 30 வினாடிகள் அப்படியே இருங்கள்; பிறகு மறு பக்கம் செய்யுங்கள்.
- பாலம் பயிற்சி (Bridge): மல்லாந்து படுத்து, முழங்கால்களை மடக்கி, பாதங்களைத் தரையில் சமமாக வையுங்கள்; கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்கட்டும். தோள்களிலிருந்து முழங்கால்கள் வரை உடல் ஒரு நேர்கோடாக வரும் வரை, இடுப்பை மெதுவாக மேலே தூக்குங்கள். 30 வினாடிகள் அப்படியே இருந்து, பிறகு கீழே இறக்குங்கள்.
- பிளாங்க் (Plank): முன்கைகள் தோள்களுக்குக் கீழே இருக்கும்படி, தண்டால் (Push-up) நிலையில் இருங்கள்; தலை முதல் குதிகால் வரை உடல் நேராக இருக்கட்டும். மையத் தசைகளையும் பிட்டத் தசைகளையும் (Glutes) இறுக்கிக்கொள்ளுங்கள். சரியான நிலை மாறாமல், உங்களால் முடிந்த நேரம் வரை அப்படியே இருங்கள்.
கீழ் முதுகு வலியைத் தடுப்பது எப்படி
சின்னச் சின்ன அன்றாடப் பழக்கங்கள் உங்கள் முதுகைப் பாதுகாக்கக்கூடும்:
- உடல் எடையைச் சரியான அளவில் வைத்திருங்கள்; கூடுதல் எடை முதுகுக்குச் சுமையாகிறது
- முதுகுக்குத் துணையாக இருக்க, மையத் தசைகளை வலுப்படுத்துங்கள்
- நெகிழ்வுத்தன்மையைக் கூட்டவும், காயம் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும், தவறாமல் நீட்சிப் பயிற்சி (Stretching) செய்யுங்கள்
- பொருட்களைத் தூக்கும்போது, முதுகின் பலத்தால் அல்ல, கால்களின் பலத்தால் தூக்குங்கள்: முழங்கால்களை மடக்குங்கள்
- இடைவெளி எடுங்கள்: நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், 20-30 நிமிடத்துக்கு ஒருமுறை எழுந்து சிறிது நடமாடுங்கள்
- நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் முதுகுத்தண்டை (Spine) இயல்பான நிலையில் வைத்து, சரியான உடல் நிலையைப் (Posture) பின்பற்றுங்கள்
- புகைபிடிப்பதைத் தவிருங்கள்; அது எலும்புகளைப் பலவீனமாக்கி, எலும்பு வலுவிழப்புக்கு (Osteoporosis) வழிவகுக்கலாம்; இதனால் முதுகு வலி வரும் வாய்ப்பு கூடும்
- போதுமான அளவு தூங்குங்கள்; இது உடல் தேறவும், தன்னைச் சீர்செய்துகொள்ளவும் உதவும்
Mobiphysio-வுக்கு வாருங்கள்
RS Puram (No.28, Captain Palaniswamy Layout, மாநகராட்சிப் பூங்கா எதிரில்) அல்லது Goldwins (11/23, Avinashi Road) கிளையில் எங்களைச் சந்திக்கலாம்.
முன்பதிவு செய்யுங்கள்
Mobiphysio பிசியோதெரபிஸ்ட்கள் · RS Puram மற்றும் Goldwins
உங்கள் முதுகு வலியைப் பரிசோதிக்க நேரம் பதிவு செய்ய, Mobiphysio-வுக்கு WhatsApp அல்லது போன் செய்யுங்கள்.
